இந்த ஜனாதிபதித் தேர்தல் எந்த வகையில் முக்கியமானது? ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்ää அரசாங்கத்தின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோஷங்களும் இந்த முறை இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலினை முக்கியத்துவம் மிக்கதாக மாற்றியுள்ளன. சிறுபான்மைச் சமூகங்களினையுந்தினையும்ää முக்கியமாக சிறுபான்மைச் சமூகங்களினைச் சேர்ந்த வாக்காளரினையும் மீண்டும் ஒரு முறை அரசு தொடர்பான அரசியல் முயற்சி ஒன்றில் பங்குபற்றுவதற்கான வெளி ஒன்றினை இந்தத் தேர்தல் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
இந்த கட்டுரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் அரசியல் பற்றியும், அரசியல் தலைமைத்துவம் பற்றியும் வடக்கு கிழக்கினைச் சேர்ந்த தமிழ் வாக்காளர் பற்றியதாகவும்ää அதிலும் குறிப்பாக வட மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் வாக்காளர் பற்றியதாகவும் இருக்கும். எனது கட்டுரை மலையகத் தமிழ் வாக்காளர் பற்றியதாகவோ தென்னிலங்கையில் பாரம்பரியமாக வாழும் தமிழ் வாக்காளர் பற்றியோ பேசமாட்டாது என்பதனைக் குறிப்பிட விரும்புகிறேன். 2015ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்புலத்தில் அந்தத் தேர்தலினை ஒட்டி எழுந்துள்ள சில சாத்தியக்கூறுகள் பற்றி சில பதிவுகளை நான் இங்கு மேற்கொள்கிறேன். நான் இங்கு பிரத்தியேகமாக வடக்கினைச் சேர்ந்த வாக்காளரைக் குறித்து எழுதுகிறேன். கிழக்கினைச் சேர்ந்த தமிழ் வேட்பாளரினைக் காட்டிலும் வடக்கிலே உள்ள தமிழ் வேட்பாளரின் சமூகத் தளம், அவரது கோரிக்கைகள், அரசியல் இலக்குகள் குறித்து நான் கூடுதலாக பரிச்சயமாயிருப்பதால் இந்த கட்டுரையில் என்னுடைய கவனம் வட பகுதி வேட்பாளர் குறித்ததாக இருக்கிறது.
வன்னியிலும், யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் வாழுகின்ற வடபகுதி வேட்பாளரினைப் பொறுத்த வரையில் 2015ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முக்கியமானது. எந்த வகையில் முக்கியமானது? வட பகுதி மக்கள் இராணுவத்தின் பிடியினுள்ளும் இராணுவம் நேரடியாகப் பிரசன்னமாக இல்லாத நிலைமைகளில் ஒருவிதமான இராணுவமயமாக்கப்பட்ட கட்டமைப்புக்களின் கீழும் வாழ்ந்து வருகிறார்கள். இராணுவத்தின் நடவடிக்கைகள் மக்களின் மீது இறுக்கமான பிடி ஒன்றினை ஏற்படுத்தி உள்ளன. அத்துடன் வழமையானதும்ää ஜனநாயக பூர்வமானதுமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இராணுவம் நெருக்கடிகளைத் தோற்றுவித்தவாறு உள்ளது. தென்னிலங்கையிலும் இதே மாதிரியான நிலைமை இருந்தாலும், வட பகுதியில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அத்துடன் இராணுவக் கட்டமைப்பின் ஒரு அங்கத்தவராக இருந்த ஒருவர் வடக்கிலே மாகாண ஆளுநராகவும் இருக்கிறார் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். வடக்கிலே கல்வி நிறுவனங்கள் இராணுவத்தினதும், பாதுக்காப்புப் பிரிவினதும் நேரடியானதும், இறுக்கமானதும் கண்காணிப்பின் கீழே இருக்கின்றன. நாளாந்த சிவில் செயற்பாடுகளினை மேற்கொள்ளும் போதும், ஒன்று கூடுவதற்கு எமக்கு இருக்கின்ற உரிமையின் அடிப்படையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும் போதும், அல்லதுய் ஊர்வலம் ஒன்றினை ஏற்பாடு செய்யும் போதும், திருமணச் சடங்குகள் போன்ற தனிப்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போதும், உள்ளூரில் உள்ள இராணுவத்தினருடனும், மத்தியில் உள்ள பாதுகாப்பு அமைச்சுடனும் பல்வேறு பட்ட வழிகளில் மிகவும் கவனமாகவும், தயவாகவும் அணுகிச் செயற்பட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் எமக்கு எமது சத்தியில் தன்னம்பிக்கையும், எதிர்காலத்தில் நிர்வாக அலுவல்கள் நடைமுறை படுத்தப் படுதல்ää அடிப்படை சுதந்திரங்கள் பாதுகாக்கப் படுதல், பலப்படுத்தப் பட்ட சிவில் அதிகாரத்தைப் பற்றய விடயங்களைப் பற்றி நம்பிக்கையும் தருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதன் மூலம் இந்தச் சு10ழல் முற்றுமுழுவதுமாக மாறி விடும் என்று நான் இங்கு சொல்லவில்லை. நாட்டிலே ஜனநாயகம் எதிர்கொள்ளும் அபாயகரமான சுழ்நிலையில் இருந்து அதனை மீட்டெடுப்பது தொடர்பான உரையாடல்களினை இந்த ஜனாதிபதித் தேர்தல் உருவாக்கி உள்ளது. இந்த உரையாடலிலே வட கிழக்கினைச் சேர்ந்த தமிழ் மக்கள் நிச்சயமாகப் பங்குபற்ற வேண்டும். ஜனநாயக ரீதியிலான ஒரு பார்வையினை முன்வைத்து இந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கினைச் சேர்ந்தவர்கள் வாக்களிப்பதுவும், தேர்தலினை ஒட்டி இடம்பெறும் கலந்துரையாடல்களில் பங்கேற்று தமது பிரச்சினைகளையும்ää ஆதங்களினையும் முன்வைப்பதுவும்ää ஜனநாயகம் தொடர்பாக நிலவும் உரையாடல்களில் ஈடுபடுவதும் மிகவும் முக்கியமான விடயங்கள். கடந்த காலங்களும், கடந்த ஜனாதிபதித் தேர்தல்களும் எமக்கு ஏமாற்றத்தினைத் தந்திருந்தாலும் கூட மாற்றத்திற்கான சில பாதைகளின் ஆரம்பஙகளை இது உண்டாக்கியிருக்கின்றது. அதற்கான ஒரு நம்பிக்கையினையும், பற்றுறுதியினையும் மனதிலே நிறுத்தி நாம் இந்தத் தேர்தலிலே வாக்களிக்க வேண்டும். ஓதுங்கி நிற்கும் அரசியல் தற்கொலை அரசியலாகும்.
வடக்கினைப் பொறுத்தவரை, சுயாதீனமானதாகவோ அல்லது கட்சி அரசியலுக்கு அப்பால் சுயாதீனமானதாகவோ இருக்கக் கூடிய அரசியல் முனைப்புக்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றன. சலுகைகளினையும், உதவிகளையும் பெற்றுக் கொள்வதனை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ஒரு புறமாகவும், தீவிரமான தேசியவாத ரீதியிலான எதிர்ப்பு அரசியல் இன்னொரு புறமாகவும், வட புலத்தில் நிகழும் அரசியல் முயற்சிகள் புத்தாக்கத் தன்மை அற்றவையாக இருக்கின்றன. இந்த இரு அரசியற் போக்குகளும்ää வட புல மக்களின் நாளாந்த யதார்ததங்கள் பலவற்றினைக் கவனத்திலே எடுக்கத் தவறிவிட்டன. வடகிழக்கினைச் சேர்ந்த தமிழ் மக்களின் தேவைகளினை அவர்களது நாளாந்த வாழ்க்கை நிலைமைகளின் அடிப்படையிலும், ஜனநாயகச் செயற்பாடுகளின் அடிப்படையிலும், அச்சம் அற்ற முறையில் அவர்கள் நீதித் துறையினை நாடக் கூடியதாக இருக்கின்றதா என்பதன் அடிப்படையிலும், தமது பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியிலான வெளிப்பாடுகளை முன்வைப்பதற்கான ஒரு சுழல் அவர்களுக்கு இருக்கிறதா என்பதன் அடிப்படையிலே நாம் மதிப்பிட வேண்டும்.
வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு சில பிரத்தியேகமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதனையும், அந்தப் பிரச்சினைகள் அவர்களை நாட்டின் பெரும்பான்மை சமூகமாகிய சிங்கள பௌத்தர்களிடம் இருந்து வேறுபடுத்துகின்றன என்பதனையும் நாம் ஒரு போதும் மறுக்கக் கூடாது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு இந்தத் தேர்தல் தீர்வுகளை வழங்கமாட்டாது. ஆனாலும் நாடாளாவிய ரீதியிலே ஜனநாயகத்தினை நேசிக்கும் சக்திகள் ஒன்றுபட்டுத் தமது பலத்தினை நிலைநிறுத்தும் போது இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய ஒரு ஆரம்பத்தினை நாம் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் வாக்களிப்பது அவசியம்.
தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையே என்ற காரணத்துக்காக யாழ்ப்பாணத்திலே உள்ள தமிழர்கள் அரசாங்கத் தொழில் செய்வதனை நிறுத்திவிடவில்லை. தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லையே என்பதற்காக இலங்கை அரசினால் நடாத்தப்படும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றாது விடுவதில்லை. கடந்த உயர்தரப் பரீட்சையில் கணிதத் துறையிலே நாடளாவிய ரீதியிலே அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவனுக்கு பலர் பாராட்டுத் தெரிவிப்பதனை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய சாதனைக்காக நான் சந்தோசப்படுவதுடன், நானும் அவரைப் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் போதிய வசதிகள் எதுவுமில்லாத சுழலிலே வன்னியிலும் யாழ்ப்பாணத்தின் உயர்தட்டினைச் சாராத பாடசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவர்கள் குறித்தும், பால் வேற்றுமைப்படுத்தல் சாதி வேற்றுமைப்படுத்தல் போன்ற காரணங்களினால் சரியான கல்வியினைப் பெறமுடியாது இருக்கின்ற வட பகுதி மாணவர்கள் குறித்து நான் அக்கறை கொள்கிறேன்.
முல்லைத்தீவில் இருந்து அரச பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான இரண்டு மாணவர்களை நான் அண்மையில் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் தனது உயர்தரப் பரீட்சையினை யுத்தம் நடைபெற்ற போது எழுதியிருந்தார். தற்போதைய அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான கல்விக் கொள்கைகள் நிறைவேற்றப்பட்டால் முல்லைத்தீவில் இருந்து அரச பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவி தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பணக்கார வர்க்க மாணவர்களுடன் போட்டியிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும். இதே நிலைமை தான் கணிதத்துறையில் அதி உயர் புள்ளி பெற்ற மாணவனுக்கும் ஏற்படக்கூடும். பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் போது பணவசதி அற்ற ஆனால் உயர் புள்ளி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகக் கல்வி பெறுமதி குன்றிவிடும். கல்வியினைத் தனியார் மயமாக்குவதற்கு எதிராக இடம்பெறும் போராட்டங்களும் இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தப் போராட்டங்கள் வட பகுதியினைச் சேர்ந்த மக்களதும், மாணவர்களதும் எதிர்காலத்துடன் தொடர்புபட்டவை. எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலினை வடக்கு கிழக்கில் வாழும் சமூகங்கள் முக்கியத்துவம் மிக்க ஒன்றாகக் கருத வேண்டிய நிலை உள்ளது.
யுத்த காலத்தில் அரசினதும் சிவில் சமூகத்தினதும் ஜனநாயகத் தன்மை வடக்கு கிழக்கிலே நிலைகுலையச் செய்யப்பட்டதன் பின்னர்ää தற்போது யுத்தத்துக்குப் பிந்தைய காலத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் வட கிழக்கில் வாழும் மக்களிடம் இருந்தும், அவர்களின் பங்களிப்பில் இருந்தும் விலகியே உள்ளன. நான் எல்லா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களினையும் விமர்சிக்கவில்லை. மக்களுடைய பங்கேற்பினை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களும், சமூகத்தினைக் கட்டியெழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களும், மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் வகையிலான நிகழ்ச்சித் திட்டங்களும் வரவேற்கத்தக்கவை. எனினும் தற்போதைய அரசாங்கத்தின் ஆக்ரோஷமான நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கும் எதிரானவையாகவே. உதாரணமாக உல்லாசப் பயணத்துறையினை விருத்தி செய்யும் வகையில் கிழக்கு இலங்கையின் கரையோரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புக்கள் அந்தப் பிரதேச மக்களை மிகவும் பாதித்துள்ளன. சம்பூர் அனல் மின்னிலைய நிர்மாணிப்புக்காக அந்தப் பகுதியினைச் சேர்ந்த மக்கள் தாம் வாழ்ந்து வந்த இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
சிறுபான்மையினரின் பிரச்சனை என்ற கேள்வி
சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளும் அவர்கள் அரசு தொடர்பான அரசியலில் எவ்வாறு நிலைநிறுத்தப் படுகின்றனர் என்பதுவும் இங்கு குறிப்பாக முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த விடயம் வடக்கு கிழக்கிலே உள்ள தமிழ் மக்களினைப் பொறுத்தவரையில் ஒரு முக்கியமான விடயம், ஏனெனில் வடக்குக் கிழக்கினைச் சேர்ந்த தமிழ் மக்கள் போரின் போது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டட்தோடு, பல தசாப்தங்களாக அரசினால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். காலப்போக்கில் வளர்ந்து வந்த இனப் பிரச்சினை தமிழ்மக்களை இலங்கை அரசியலின் மையத்தில ஆனால் நெருக்கடியான இடத்தில் இருத்தியது. அது அவர்களைத் தேசியவாத ரீதியிலும் புறமொதுக்குதலினை உருவாக்கும் ஒரு அபாயகரமான அரசியல் நிலைப்பாட்டினை எடுப்பதற்கும் நிர்ப்பந்தித்தது.
இந்த அரசியல் எமக்கு நன்மைகளினைத் தரவில்லை. போர்க் காலப்பகுதியில் நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ஒரு அடையாள நிலைப்பாட்டினுள் எமது அரசியலினை குறுக்கி விட்டோம். பாதிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட இனம் என்ற அடையாளங்களுக்கு அப்பால் எம்மால் செயற்பட முடியவில்லை. அத்துடன் அரசியல் ரீதியாகத் தமிழ் என்ற அடையாளத்துக்கு அப்பால் நாம் வேறு எந்த வகையிலும் எம்மைப் பற்றிச் சிந்திக்கவில்லை. ஒரு தமிழருக்கு இருக்க வேண்டிய பிரச்சினைகள், இலக்குகள் என்பன அந்தத் தமிழர் என்ற அடையாளம் ஒன்றினால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதாக வடபகுதி வாக்காளர்கள் கருதி வந்துள்ளனர். கிழக்கிலே இந்த மாதிரியான ஒரு நிலைமை இருக்கின்றதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.
தமிழ்த் தேசியவாதத்திமால், புறமொதுக்குகின்ற, இன அடையாளத்தினை மாத்திரம் முன்னிறுத்திய ஒரு அரசியல் உரையாடலுக்குள் வடக்கில் உள்ள தமிழர்கள் முடங்கியுள்ளனர்.. இதன் காரணமாகத் தமிழர் மத்தியில் நடைபெறும் அரசியல் வர்க்கம், பால், சிறுபான்மை, சாதியம் போன்ற அரசியற் பார்வைகளின் ஊடாக விளங்கிக் கொள்ளக் கூடிய சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி கவனத்தில் எடுக்காது விட்டுள்ளது.
தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் யுத்தத்தினால் பாதிக்கப்படவில்லை என்றோ அல்லது அந்தப் பாதிப்புக்கள் முக்கியமானவை இல்லை என்றோ நான் இங்கு சொல்லவில்லை.இராணுவமயமாக்கல், இடம்பெயர்வுகள், மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகள் திருப்திகரமான முறையிலே தீர்க்கப்படவில்லை என்பதனை யாரும் மறுக்க முடியாது. இடப்பெயர்வு, மீள்குடியேற்றம், மொழி உரிமைகள், காணி உரிமைகள்ää நிருவாக ரீதியிலான பிரச்சினைகள் என்பன வேறுபட்ட சமூகங்களினை வேறுபட்ட வகைகளிலும்ää ஒரு குறித்த சமூகத்தினைச் சேர்ந்த வேறுபட்டபிராந்தியங்களைச் சேர்ந்தோரை வேறுபட்ட வகைகளிலும் பாதிக்கின்றன. இவ்வாறான உள்ளக ரீதியிலான வேறுபாடுகளுக்கு மத்தியிலும், வட இஅலங்கையினைச் சேர்ந்த தமிழர்கள் தமது அரசியல் வாழ்வுக்கு வேண்டிய ஒரு பொது அடையாளத்தினைத் தெரிவு செய்துள்ளார்கள். அவர்கள் வாக்களிக்கும் போது, அல்லது முன்னைய காலங்களிலே வாக்களித்த போது, அல்லது வாக்களிப்பதற்கு அனுமதிக்கப் பட்ட போது, பாரிய அளவில் அவர்கள் தேசியவாதக் கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இந்த நிலை 70களுக்குப் பின்னர் அதிகரித்துச் சென்றுள்ளது. ஒரு காலத்திலே குடாநாட்டிலே செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரி நிலைப்பாடுகளும், இடது சாரி அரசியல் முனைப்புக்களும் வரலாற்று ரீதியாகத் தென்னிலங்கையினைச் சேர்ந்த இடது சாரி அரசியல் தமிழர்களைப் புறமொதுக்கியமையாலும் அதே நேரத்தில் வட பகுதியில் எழுச்சி பெற்ற தேசியவாத அலையினாலும் அடித்துச் செல்லப்பட்டன.
வட பகுதி மக்களின் சமூக ரீதியிலான வாழ்க்கை யதார்த்தத்திலே அவதானிக்கப்படும் சிக்கலான தன்மைகள் அந்த சமூகத்தின் பெயரில் மேற்கொள்ளப்படும் அரசியல் வெளிப்பாடுகளில் பிரதிபலிப்பதில்லை. யுத்த காலத்திலே பெரும் எண்ணிக்கையானோர் வடக்கினை விட்டு வெளியேறினர். போரின் காரணமாகவும், இடப்பெயர்வின் காரணமாகவும் வட பகுதியினைச் சேர்ந்த தமிழ் சமூகம் பாரிய இழப்புக்களைச் சந்தித்தது. பல வருடங்களாக வட பகுதி விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. விடுதலைப் புலிகளின் சித்தாந்தம், அவர்களுடைய குறுகிய தேசியவாத சிந்தனை, ஆதிக்கவாதம், பாசிச நிருவாக இயல்புகள், இடைப் பட்ட காலத்தில் எவ்வாறு சமூகத்தினைப் பாதுகாப்பது என்பது தொடர்பில் அவர்களிடம் உத்திகள் எதுவும் இருக்காமைää தனி நாட்டினை அமைப்பதில் மட்டும் அவர்கள் காட்டிய மோகம் போன்ற விடயங்களின் எச்சங்கள் இன்றும் வட பகுதி அரசியலின் சில தரப்புகளிடம் தொடர்ந்தும் அவதானிக்கப்படுகின்றன.
வட புல மக்களின் சமூக வாழ்க்கைக்கும்அவர்களின் அரசியல் கருத்து வெளிப்பாடுகளுக்கும் இடையில் தொடர்ந்தும் ஒரு இடைவெளியும், தொடர்பின்மையும் காணப்படுகின்றன. வேலையின்மையினாலும், திறமை வாய்ந்த ஊழியர்களின் பற்றாக்குறையினாலும், பல்வேறு மட்டங்களில், உயர்ந்த உத்தியோகங்களிலும், தொழிலாளர் வர்க்க மட்டத்திலும் நிலவும் சாதி ரீதியிலான வேற்றுமைப்படுத்தல்கள் காரணமாகவும், மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகிறது. கல்வி, வீடமைப்பு, விவசாயம், மீன்பிடி, கடலில் மீன்பிடிப்பதற்கான உரிமை, அரச அலுவலகங்களிலே வேண்டிய பணிகளைப் நிறைவேற்றிக் கொள்வதற்கான உரிமை போன்ற பல்வேறு விடயங்கள் மக்களினைப் பாதிக்கின்றன. மீளக் குடியேறியோர் தமது வாழ்வினைப் புதிதாக ஆரம்பிப்பதற்கு வேண்டிய மூலதனம் இல்லாது கடனுக்குள் அகப்பட்டு விடுகிறார்கள். கடன், அறுவடை வீழ்ச்சி, மூலதனம் இல்லாமை, வெளித்தரப்புகளிடம் இருந்து சந்தை ரீதியாக எதிர்கொள்ளும் போட்டிகள் (வடக்கினையும்ää தெற்கினையும் இணைக்கும் பாதை திறக்கப்பட்டமை வட பகுதியில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வட பகுதிக்கு வெளியில் சந்தையினை உருவாக்கிக் கொடுத்துள்ளது என்றாலும்) போன்றன ஏனைய சமூகங்களினையும் பாதிக்கின்றன.
வடக்கினைப் பொறுத்தவரையில். அதே நேரத்தில் வடக்கிலே ஒரு புதிய மத்திய தர வர்க்கம், வடக்கின் பழைய மத்திய தர வர்க்கத்தின் சாம்பல்களில் இருந்தோ, அல்லது பழைய மத்தியதர வர்க்கத்தின் ஒரு உட்பிரிவில் இருந்தோ அல்லது பழைய மத்தியதர வர்க்கத்தின் ஒரு நீட்சியாகவோ எழுச்சி பெற்று வருகிறது. இந்த மத்திய தர வர்க்கம் எவ்வளவு தூரம் முனைப்புடனும், முற்போக்காகவும், சமூக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இயங்கப் போகின்றது என்பதனை நாம் இனிமேல் தான் பார்க்க வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணயம் என்ற கோஷம் வரலாற்று ரீதியிலான மாற்றங்களுக்கூடாக செல்லவேண்டிய தேவை இன்று உள்ளது. இன்யை சூழ்நிலையில், பழையதின் மேல் புதிய பரிமாணங்கள் எழுந்துள்ளன—புதிய பயங்கள், கவலைகள், ஆசைகள்; பலங்கள், நம்பிக்கைகள் என்பன. தமிழ் தலைமைகள், மற்றும் புத்திஜீவிகள் இந்த மாறுபட்ட புதிய கட்டத்தை கருத்தில் கொள்ளாவிடின், காலப் போக்கில், மக்களின் மீதுள்ள பிடியை அவர்கள் இழந்து விடுவார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டினை எடுக்காமை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. அவர்களது காத்திரமான முடிவை நாம் வரவேற்க வேண்டும். தீவிர தேசியவாதிகள் இத்தகைய நிலைப்பாட்டினை எடுப்பதை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
வடக்குப் பிராந்தியமும் அதன் உட்புல சிக்கல்களும்–முஸ்லீம்கள்
முஸ்லிம்கள் தமிழர்கள் மற்றும் தமிழ் அரசியற் செயற்பாடுகள் என்பவற்றுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான கேள்வி எமது உடனடிக் கவனத்தினை ஈர்த்துள்ளது. சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பாக பரந்த அளவிலே இருக்கின்ற கேள்விகள் போல இந்தக் கேள்வியும் மிகவும் முக்கியமானது. பாதிக்குப்புக்கு உள்ளானவர்கள் என்ற சுலோகம் இந்த இரண்டு சமூகங்களுக்கு இடையிலான உறவுகளிலே ஒரு நெருக்கடியினை உருவாக்கியுள்ளது. யாழ்ப்பாணத்தினைப் பொறுத்தவரை குடாநாட்டுக்குத் திரும்பிய அல்லது திரும்பிக்கொண்டிருக்கின்ற முஸ்லீம்கள் குடாநாட்டு தமிழர்களின் வரவேற்பினைப் பெறவில்லை. புறமொதுக்குகின்ற பார்வையுடனும், கோஷங்களுடனும் செயற்படுகின்ற தமிழ்ப் புத்திஜீவகளும் தமிழ் அரசியல் தலைமைகளும் முஸ்லீம்கள் தொடர்பான விடயங்களிலே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு எதனையுமே செய்யவில்லை. . காரியாலயங்களிலே பணிபுரியும் தமிழ் உத்தியோகத்தர்கள் தமது ஊர்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் முஸ்லீம் மக்களின் தேவைகள் குறித்து அக்கறை அற்றவர்களாகவோ அல்லது அவர்களை உதாசீனப்படுத்துபவர்களாக இருக்கின்றனர். வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலே தமிழ் முஸ்லீம் உறவுகள் பரஸ்பர நம்பிக்கையின்மையினாலும், ஆதிக்க உணர்வுகளினாலும், புறமொதுக்கும் மனப்போக்குகளினாலும், அரசியற் சந்தர்ப்பவாதத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் அரசியல் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, அனைத்துத் தரப்புக்களையும் உள்வாங்குகின்ற ஒரு கொள்கைகளின் மூலமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அரசு பங்களிக்காமை தமிழ்-முஸ்லீம் உறவுகளில் விரிசல் ஏற்படுவதற்கு மற்றொரு பிரதான காரணியாக அமைந்துள்ளது.
வடக்கிலே கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற மலையகத் தமிழ் மக்கள் தொடர்பாகவும், அவர்கள் போரின் போது எதிர்கொண்ட நெருக்கடிகள் குறித்தும் கருத்துக்களை முன்வைக்கவும், அந்த சமூகத்தினைச் சேர்ந்தோரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் உகந்த சுழலினை உருவாக்கக் கூடிய தளங்களோ வெளிகளோ இன்னமும் உருவாகவில்லை.தமிழ் அரசியலும் சரி, சிறுபான்மை இனத்தவரினை மையமாகக் கொண்ட அரசியலும் சரி உரையாடல்கள் வாயிலாகத் தமது பிர்ச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட வேண்டும். தாம் சார்ந்த பிரதேசங்களின் பொருளாதார சுழ்நிலையினை அந்தப் பிராந்தியங்களின் பின்புலத்தில் வைத்து இந்த அரசியல் முயற்சிகள் மதிப்பிட வேண்டும். முஸ்லீம், தமிழ், சிங்கள மக்கள் தாம் முன்னர் வாழ்ந்த இடங்களுக்கோ அல்லது குடியமர்த்தப்பட்ட இடங்களுக்கோ அவர்கள் மீளத்திரும்புவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்பதனை இந்த அரசியல் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள வேன்டும். அத்துடன் அவை தீர்மானங்களினை எடுப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம் என்பதனை வலியுறுத்த வேண்டும். மத்தியிலும், பிராந்தியங்களிலும் அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படல் வேண்டும் என்பது தொடர்பில் சிங்கள சமூகத்தவருடனும், சிறுபான்மைச் சமூகங்களுடனும் உரையாடல்கள் மேற்கொள்ளப்படல் அவசியம். இதனை மேற்கொள்வதற்கு சிறுபான்மையினரின் அரசியல் முதலில் தனது நிலையம் எவ்வாறு இலங்கையின் அரசியற் கட்டமைப்புக்குள் பின்னிப்பிணைந்து இருக்கின்றது என்பதனை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தமிழ் அரசியல் எதிர்ப்பு அரசியலாகவோ, பிற தரப்பினரினை உள்வாங்கிச் செயற்பட எத்தனிக்கும் அரசியலாகவோ, அல்லது தேசியவாத அரசியலாகவோ. எந்த வடிவினைக் கொண்டிருந்தாலும், அது இலங்கை அரசியலிலும், அரசினைச் சார்ந்தும் இடம்பெறும் மாற்றங்களினையும், போக்குகளினையும் கருத்திலே எடுத்து அவை எவ்வாறு தமிழர்களுடன் ஊடாடுகின்றன என்பது பற்றி அக்கறை கொள்ள வேண்டும்.
பொருளாதார ரீதியிலும் சரி, சமூக ரீதியிலும் சரி, கட்டமைப்பு ரீதியிலும் சரி வடக்குக் கிழக்கினைச் சேர்ந்த தமிழ் வாக்காளர் இலங்கை அரசினதும் குடித்தொகையிலும் தவிர்க்க முடியாத வகையில் அங்கம் வகிக்கிறார். இந்தக் கருத்தினை மறுப்பது நேர்மையற்றதும், புத்திசாதுரியம் அற்றதுவுமான ஒரு நிலைப்பாடே. அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும், 13ஆம் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவது பற்றியும் தென்னிலங்கையில் உள்ள அரசியற் தலைமைகளுடனும், சிவில் சமூகக் குழுக்களுடனும் தமிழ் அரசியற் தலைமைகள் பேசுவது அவசியம். பல்வேறு தரப்புகளிலே சிறுபான்மையினர் ஏற்கனவே பல உரையாடல்களை இந்த விடயங்கள் தொடர்பாக ஆரம்பித்து விட்டார்கள் என்பதனையும், திரும்பவும் தமிழர்கள் ஏனைய சமூகங்களுடனும் தம்மத்தியிலும் உரையாட வேண்டும் என்று கோருவது பலம் குன்றிய தரப்பின் மீது முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்படி அழுத்தத்தினை பிரயோகிப்பது போல இருக்கிறது என்ற குற்றச்சாட்டை எனக்கு மீது விமர்சகர்கள் வைக்கலாம். நடைபெற இருக்கின்ற உரையாடல்கள் புதிய உள்ளடக்கத்தினைக் கொண்டவையாகவும்ää புதிய நிலைமைகளின் கீழ் நடைபெற வேண்டும் என்பதுவும், தொடர்ச்சியாக மாறுதலுக்கு உள்ளாகின்ற களநிலைமைகளைக் கருத்திற் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் இந்த உரையாடலுக்கான ஒரு அரசியல் கலாச்சாரத்தையும், அடிப்படைகளையும், பொருளடக்கத்தையும் தந்துள்ளது. ஒரு மிக முக்கியமான வெளியினை ஏற்படுத்தி இருக்கின்றன. நிறைவேற்று அதிகார சனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம். ஊழல் மற்றும் பதவித் துஷ்பிரயோகம் போன்ற விடயங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளும், எதிரணியினரும் ஆரம்பித்துள்ள விவாதங்கள் வட பகுதி வேட்பாளரினைப் பொறுத்த வரையிலே முக்கியமற்றவை போன்றுதென்படலாம். ஆனால், 1) மெகா அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் அவற்றுக்கு மாற்றாக அமையக் கூடிய 2) நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக் கூடிய மக்களின் முன்னெடுப்புக்கள் குறித்தும், 3) அதிக செலவில் நிர்மாணிக்கப்படும் அதி வேக நெடுஞ்சாலைகள் குறித்தும் அவற்றுக்கு மாற்றாக 4) கிராமப்புறங்களின் வீதி அபிவிருத்தி பற்றியும், 5) இடம்பெயர்ந்து வாழும் சமூகங்களைச் சேர்ந்தோரும், தொழிலாளர்களும், மீனவர்களும், பெண்களும், ஊடகவியலாளர்களும், கலைஞர்களும், மிலேச்சத்தனமான இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும், அடக்குமுறையினை உருவாக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிராகவும் போராடுவதற்கு வேண்டிய வெளியினைப் பற்றியும் 6) மேலே கூறிய உரையாடல்களை உருவாக்குவதற்கு அவசியமான ஒன்று கூடற் சுதந்திரத்தினைப் பற்றியும் கருத்துப் பரிமாறல்களை நாம் மேற்கொள்ள முடியும். இந்த உரையாடல்களிற் பங்குகொள்ளுவதில் இருந்து தமிழ் வாக்காளர் ஒரு போதும் ஒதுங்கக் கூடாது.
ஜனநூயகத்தை நோக்கிய திசைகளின் எழுச்சி
ஜனநாயகத்தினைப் பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் ஒரு பலமான குரல் இன்று எம்மத்தியில் ஒலிக்கிறது. அதிகாரம் தமது கையிலே இருக்கிறது என்ற மமதையுடன் செயற்படுபவர்களுக்கு, எதிர்ப்பு ஏதோ ஒரு பகுதியில் இருந்து எழுச்சி பெறும் என்ற செய்தியினை இந்த தேர்தல் தெளிவாகச் சொல்கிறது. ஜனநாயகத்துக்கான தளம் விரிவடைந்துள்ளது. மக்கள் வெளிப்படையாகப் பேசியும், செயற்பட்டும் வருவதுடன் தமது இலக்குகள் பற்றி தமது குரலினை வெளிப்படையாகப் பதிவு செய்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் ஜனநாயகம் என்பது தனிநபர் ஒருவர் வெளிப்படையாகப் பேசுவதோ அல்லது செயற்படுவதோ அல்ல. மாறாக ஜனநாயகம் சமூக ரீதியிலான விடயங்களிலும், கலாசார ரீதியிலான விடயங்களிலும் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு அம்சம். கடன் சுமையினால் வருந்துகின்ற விவசாயியினதும், போரினாலே பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களினதும், ஒரு நியாயபூர்வமான வாழ்க்கைத் தரத்தினை வேண்டி நிற்கும் தொழிலாளியினதும், சமூக ரீதியிலே ஏற்றம் கிடைக்காது நம்பிக்கை இழந்து போய் நூற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக சமூகத்தினதும், அபாயகரமான வாழ்க்கையினை வாழும் நாடு கடந்து வேலை செய்யும் தொழிலாளியினதும், அரசில் இருந்து அந்நியமாக்கப்பட்ட புறமொதுக்கப்பட்ட தாம் இரண்டாந்தரப் பிரசைகள் என்ற உணர்வுடன் வாழும் சிறுபான்மை இனத்தவரினதும், பல நூற்றாண்டு காலமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வாழும் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினரதும், தமது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற சுழலினை எதிர்கொள்ளும் மாணவரினதும், சமூகத்தினதும், அரசினதும் வன்முறைக்குள் அகப்பட்டுப் போய் இருக்கும் பெண்களினதும், பாரிய அபிவிருத்தித் திட்டங்களினால் தமது வாழ்வாதாரத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறு வியாபாரிகளதும், கலாசார ரீதியிலும், புலமை ரீதியாகவும் செயற்படுவதற்கு வேண்டிய வெளிகள் மூடப்பட்ட நிலையில், நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், கல்விமான்களினதும், இன்னும் பலதரப்பட்ட மக்கள் கூட்டத்தினரதும் நலன்களைப் பேணுவதே அர்த்தம் பொதிந்த ஜனநாயகம் ஆகும்.
2015ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் எம்மிற் பலருக்கு சில நம்பிக்கைகளைத் தோற்றுவித்துள்ளது. தேர்தலிலும் அதனுடன் தொடர்பான உரையாடல்களிலும் பங்குபெற வேண்டியவர்களில் தமிழ் வாக்காளரும் ஒருவர். இந்தத் தமிழ் வாக்காளர் ஒரு இடம்பெயர்ந்தவராகவோ, மாணவராகவோ, சிறுபான்மையினராகவோää பெண்ணாகவோ வேறு எந்த அடையாளத்தினை உடையவராகவோ இருக்கலாம். ஒரு வெளி திறக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம். உண்மையினைச் சொல்லின் ஒரு வெளி ஏற்கனவே உருவாகி உள்ளது. ஜனநாயகத்துக்கான போராட்டம் 2015ஆம் ஆண்டுத் தேர்தலுடன் முடிவடையப் போவதில்லை. பல்கலைக்கழகங்களையும், கல்வி சார் நிறுவனங்களினையும் சார்ந்த எம்மில் சிலர் இலவசக் கல்வியினைப் பாதுகாக்கவும், அர்த்த பூர்வமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் எதிர்காலத்திலே தொடர்ந்தும் போராடும் அதேவேளை, எல்லா ஜனநாயக சக்திகளும் ஜனநாயகத்துக்கான வெளியினை விரிவுபடுத்தப் போராடுவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.